Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 9 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம், சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் பழைய கல்வெட்டு இருப்பதாக அவ்வூர் சிவனடியார் இல்லங்குடி என்பவர் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், கல்வெட்டு ஆய்வாளர் ஆறுமுகனேரி முனைவர் த.த. தவசிமுத்து அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார்.
இது பற்றி முனைவர் த.த.தவசிமுத்து கூறுகையில்,
பாண்டிய நாட்டின் கிழக்கு கடற்கரையில் கொற்கை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய துறைமுகங்களுடன் இடைக்காலத்தில் குலசேகரப்பாண்டியன் பெயரால் வணிக நகரமாக இவ்வூர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் பாண்டியர், சோழர், சேரர் இடையே கடும் போட்டி நிலவியது.
குலசேகரன்பட்டினம், மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் வணிகத் துறைமுகமாக இயங்கியதை இவ்வூர் கச்சிகொண்ட பாண்டீஸ்வரர் கோயில் கல்வெட்டு மூலம் அறியலாம். இவ்வூரில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகரப்பாண்டியன், உதயமார்த்தாண்டன் ஆகிய பாண்டிய, சேர மன்னர்கள் பெயரில் கச்சிக்கொண்ட பாண்டீசுவரர், குலசேகரவிண்ணவர் எம்பெருமான், உதயமார்த்தாண்ட விநாயகர் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் மத்திய தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட மற்றொரு சிவன் கோயிலான சிதம்பரேஸ்வரர் கோயிலும் உள்ளது. இதன் கருவறை அதிட்டானப்பகுதியான ஜகதி, பட்டிகையில் இருந்த கல்வெட்டு இதுவரை பதிவு செய்யப்படாத கல்வெட்டு ஆகும். இதில் மூன்று வரிகள் தெளிவாக உள்ளன. அதன் பின்பு தெளிவற்று சிதைந்துள்ள இக்கல்வெட்டில் உள்ள வரிகள் மூலம் இது முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி.பி.1268-1318) கல்வெட்டு என அறிய முடிகிறது. இதில் மானவீர வளநாட்டு குலசேகரப்பட்டினம் என இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.
இந்த கல்வெட்டில் ''உரிமை கொண்டருளிய, நெல்லு நாழியும் கொள்வார்களாக, இந்தபடிக்கு அதிகம், இப்படி நாளது முதலுக்கு தானப் பிறமான, இந்த தானப் பிறமானம், இவ் ஊர்கள் திருவாதிரை'' போன்ற சொற்கள் மட்டுமே வாசிக்க முடியும் நிலையில் உள்ளன.
இதன் மூலம் திருவாதிரை நாளில் இந்த கோயிலுக்கு உரிய பூஜைகள் செய்ய மன்னர் குலசேகரப்பாண்டியன் நிலம் தானமாக வழங்கியிருக்கிறார் எனலாம். இந்த நிலத்தில் விளைந்த நெல்லும், நாழி அளவும் சொல்லப்படுகிறது. நன்செய் நிலங்களில் இருந்து வந்த நெல் உள்ளிட்ட விளை பொருட்கள் மூலம் கோயிலில் தினசரி பூஜைகளும், திருவிழாக்களும் என்றென்றும் நடத்திட வேண்டும் என முற்காலத்தில் கோயிலுக்கு தானப் பிறமானமாக நிலம் வழங்கியுள்ளனர். கல்வெட்டு எழுத்தமைதி கொண்டு இது 750 ஆண்டுகள் பழமையானது எனலாம்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, சிவன் கோயிலில் உள்ள கி.பி.1281-ம் ஆண்டு, முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டும் இதே எழுத்தமைதியில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொண்டியில் உள்ள சிவன் கோயில் பெயரும் சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயில் தான். இடைக்காலத்தில் குலசேகரப்பட்டினம், தொண்டி ஆகியவை பாண்டியரின் துறைமுகங்களாக விளங்கியவை ஆகும் என கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN