Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 9 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரியில் உள்ள உப்பளம் மைதானத்தில் இன்று (டிச 09) காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11 மணி அளவில் விஜய் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கம்போல் அறிவித்த நேரத்தைக் கடந்தும் விஜயின் பேச்சு தொடங்கப்படமலே இருந்தது.
இதனிடையே, விஜயின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், நிகழ்ச்சிக்கு போதிய கூட்டம் சேராததால், QR குறியீடு அனுமதிச் சீட்டு இல்லாதவர்களையும் அனுமதிக்கக் கோரி, தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி ஈஷா சிங், “உங்களால் ஏற்கெனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இனி யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை” என புஸ்ஸி ஆனந்தைக் கடுமையாக எச்சரித்தார். அதன்பின் அங்கிருந்த நிர்வாகிகள் அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / vidya.b