Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி , 9 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று (டிச 09) தவெக பொதுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
இந்தப் பொதுக் கூட்டத்துக்கு காலை முதல் ஏராளமான தொண்டர்கள் வருகை புரிந்தனர்.
இப்பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு, கியூஆர் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டது.
கியூஆர் கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக் கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.கூட்டம் நடைபெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல போலீஸார் கட்டுப்பாடு விதித்தனர். போலீஸார் உடன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரை தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்கள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீஸார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச் செயலாளர் ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக் கூட்டத்துக்கு அனுமதிப்போம்.
காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b