செங்கல்பட்டில் 26 பவுன் தங்க நகைகள், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் திருட்டு
செங்கல்பட்டு, 23 மே (ஹி.ச.) செங்கல்பட்டு அருகே உள்ள மேலமையூர் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 26 பவுன் தங்க நகைகள், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத
Chengalpattu Police Station


செங்கல்பட்டு, 23 மே (ஹி.ச.)

செங்கல்பட்டு அருகே உள்ள மேலமையூர் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 26 பவுன் தங்க நகைகள், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலமையூர் பகுதியைச் சேர்ந்த மதிமந்திரம் (42) என்பவர் சென்னை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொழில் தொடர்பாக ஈரோடு சென்ற அவர், சுமார் ஒரு மாத காலமாக அங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேலமையூரில் உள்ள அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மதிமந்திரத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அவசரமாக செங்கல்பட்டில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் மூன்று கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பைகளில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள், சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதிமந்திரம் உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீட்டை கண்காணித்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மேலமையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN