Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
சென்னை, ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அருகில் அரசுக்கு சொந்தமான நடமாடும் கழிவறை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று அழு குரல் கேட்பதை அங்கிருந்த தூய்மைப் பணியாளர் உணர்ந்து உள்ளார்.
இதன் அடிப்படையில் அவர் தேடிப் பார்த்ததில், பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன குழந்தை அந்த கழிவறைக்கு உள்ளே, நஞ்சுக்கொடி கூட அகற்றப்படாத நிலையில் தூக்கி வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதை பார்த்து அதிர்ந்து போன தூய்மைப் பணியாளர், உடனடியாக சம்பவம் குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகர், கழிவறையில் இருந்த குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.
ஆம்புலன்ஸுக்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்காமல் இருக்க, தன்னுடைய வாகனத்திலேயே அவர் தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அக் குழந்தைக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு மருத்துவர்கள் குழந்தையை தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை கண்டறியும் பணியில் களமிறங்கி உள்ளனர். குறிப்பாக, ஓஎம்ஆர் சாலையில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளைக் கொண்டு போலீஸார் தங்களின் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிப்பறையில் வீசிய பச்சிளம் குழந்தையை ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல், துரிதமாக செயல்பட்டு தன்னுடைய வாகனத்திலேயே தூக்கிச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் ராஜசேகருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். அதேவேளையில், நீதிமன்றம் அருகிலேயே பச்சிளம் குழந்தை கழிப்பறையில் தூக்கி வீசப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN