Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 70 வயது மூதாட்டியிடம் தங்க நகைகளை பறித்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் பெங்களூர்வில் கைது செய்துள்ளனர்.
செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜய் (27) என்பவர், 70 வயது மூதாட்டியிடம் இருந்து தங்கத் தாலி மற்றும் இரண்டு தங்க குண்டுகளை பறித்ததுடன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவத்திற்குப் பிறகு அஜய் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து அஜய் பெங்களூரில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், மூதாட்டியிடம் இருந்து பறித்த தங்க நகைகளை பெங்களூரில் உள்ள தனியார் நகைக் கடையில் விற்றதை அஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அந்த நகைகளை மீட்டனர்.
மேலும், அஜய் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN