Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச)
தொகுதி மக்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ காமாட்சி 'கியூஆர் கோடு' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த 'கியூஆர் கோடு'-ஐ ஸ்கேன் செய்தால், அதில் வரும் புகார் மனுவில் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். அந்த புகார்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காமாட்சி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்,
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மக்கள் குறை தீர்ப்பதற்காகவும் 'கியூஆர் கோடு' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நேரில் வர முடியாத பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் இதன் மூலம் புகார் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 'கியூஆர் கோடு' அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களில் சுமார் 200 புகார்கள் வந்துள்ளன. இதில் வரும் சிறிய புகார்களுக்கு உடனடியாகவும், பெரிய குறைகளுக்கு 10 முதல் 15 நாட்களிலலும் தீர்வு காணப்படும்.
சாலை வசதிகள், மழை நீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய் குறித்து அதிகப்படியான புகார்கள் வந்துள்ளன. அனைத்தையும் ஆய்வு செய்து பிரச்சனைகளை தீர்க்க சிறிது காலம் தேவைப்படும். பொழிச்சலூர் பகுதியில் ஏரிகள் ஓரம் குப்பைகள் கொட்டுப்படுவதாக நேற்று புகார் வந்த நிலையில், தற்போது அங்கு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் குப்பை தொட்டிகள் இல்லாத பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளோம்.
பல்லாவரம் தொகுதியில் குண்டும் குழியமான மோசமான சாலைகளை கணக்கெடுத்து, அது குறித்த அறிக்கையை அந்தந்த துறை அமைச்சர் இடம் கொண்டு சேர்த்து தீர்வுகளை காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை காலம் வருவதற்கு முன்பு குப்பைகள் முழுவதுமாக அகற்ற வேண்டும். தொகுதி முழுவதும் மழை நீர் வடிகால் பணிகளை சீரமைக்க வேண்டும். மழைக் காலத்தில் மழை நீர் தேக்கம் என்ற ஒரு பிரச்சனையை இருக்கக் கூடாது என்ற நோக்கில் நாங்கள் இந்த பணிகளை கணக்கிட்டு செய்து வருகிறோம்.
நாங்கள் தற்போது தான் புதிய ஆட்சி அமைத்துள்ளோம். தொகுதி மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை முதலில் ஆராய்ந்து, அதற்கான தீர்வை காண உள்ளோம். மேலும் தொகுதியில் எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என்பதை ஆய்வு செய்து அதற்கான பணியை செய்ய உத்தரவிட உள்ளேன். தாம்பரம் மாநகராட்சி மேயர், மண்டல அதிகாரிகள் திமுகவைச் சார்ந்தவராக இருந்தாலும், இதுவரை எங்களுக்கு எந்த ஒரு இடையூறும் தரவில்லை.
மேலும் தொகுதி பிரச்சனைகளை புகாராக அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'கியூஆர் கோடு' துண்டு பிரசுரங்களாக அனைவருக்கும் வழங்கப்படும்.
அதே போல் அனைத்து வாட்ஸ் ஆப் குழுக்களிலும் பகிரப்பட உள்ளது. மேலும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் இந்த 'கியூஆர் கோடு' ஒட்டப்படும். பொதுமக்களும் என்னை நேரில் எளிதில் அணுகி தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN