Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
திருச்சி – சார்லபள்ளி இடையிலான தற்காலிக மற்றும் சிறப்பு வாராந்திர இரயிலை நிரந்தர வாராந்திர இரயில் சேவையாக மாற்றிய மத்திய இரயில்வே துறையின் அறிவிப்பிற்கு மதிமுக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
எனது கோரிக்கையை ஏற்று, திருச்சி – சார்லபள்ளி இடையிலான தற்காலிக மற்றும் சிறப்பு வாராந்திர இரயிலை நிரந்தர வாராந்திர இரயில் சேவையாக மாற்றிய ஒன்றிய இரயில்வே துறையின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். இந்த முடிவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக, கடந்த 02.03.2026 தேதியன்று ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும், 07.03.2026 தேதியன்று திருச்சி மண்டல இரயில்வே மேலாளருக்கும் கடிதம் எழுதியும், நேரிலும் வலியுறுத்தியிருந்தேன்.
அந்தக் கடிதத்தில், தற்காலிக மற்றும் சிறப்பு இரயிலாக இயக்கப்பட்டு வரும் (இரயில் எண்கள் 17077/17078) திருச்சி – சார்லபள்ளி வாராந்திர சிறப்பு இரயிலை, நிரந்தர வாராந்திர இரயில் சேவையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.
மேலும், இந்த சிறப்பு இரயில் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு முக்கிய சேவையாக இருப்பதுடன், வடதமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களையும் இணைக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினேன். இந்த இரயில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பல பகுதிகளுக்கும் முக்கிய இணைப்பாகச் செயல்பட்டு வருவதையும் எடுத்துரைத்தேன்.
இச்சேவை தொடங்கிய நாளிலிருந்து, மத்திய தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. திருச்சி மற்றும் ஹைதராபாத் இடையே தற்போது நேரடி இரயில் சேவை இல்லாத நிலையில், இந்த சேவை அந்தக் குறையை சிறப்பாக நிவர்த்தி செய்து வருவதாகவும் வலியுறுத்தினேன்.
இந்த இரயில் பெரும்பாலான நாட்களில் முழு பயணிகள் நிரம்பிய நிலையில் இயக்கப்படுவதால், இவ்வழித்தடத்தில் ஒரு நிரந்தர இரயில் சேவையின் அவசியத்தை சுட்டிக்காட்டினேன்.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த சிறப்பு இரயில் சேவையை நிரந்தரமாக்குவது பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும், மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தேன்.
எனது அனைத்து விளக்கங்களையும் ஏற்றுக்கொண்டு, ஒன்றிய இரயில்வே துறை, (பழைய இரயில் எண்: 17077/17078) திருச்சி – சார்லபள்ளி சிறப்பு இரயில் சேவையை நிரந்தர விரைவு இரயில் சேவையாக (புதிய இரயில் எண்: 07615/07616) செயல்படுத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த முக்கிய நடவடிக்கை இப்பகுதி மக்களால் மிகுந்த வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். எனவே, எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் மற்றும் இவ்வழித்தடத்தைப் நிரந்தரமாக பயன்படுத்த எதிர்பார்த்திருக்கும் அனைத்து பயணிகளின் சார்பாக, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களுக்கும், அத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b