வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் முஹமது பர்வேஸ்
புதுக்கோட்டை, 23 மே (ஹி.ச) தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற முஹமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அரசு அதிகாரிகளோடு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆ
Minister Parvesh


புதுக்கோட்டை, 23 மே (ஹி.ச)

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற முஹமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அரசு அதிகாரிகளோடு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் முஹமது பர்வேஸ்,

மாவட்டத்தின் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறிப்பாக சுகாதாரமான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆட்சி காலத்தில் அவர்கள் சரியாக திட்டங்களை செயல்படுத்தினார்களா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதை விட நாம் என்ன புதிதாக செய்யப் போகிறோம்? என்பது குறித்து ஆலோசனை நடத்தி திட்டங்களை நிறைவேற்றுவேன்.

வேலைவாய்ப்புத் துறையின் இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது. அது தொடர்பாக தற்போது தமிழக முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் ஆய்வு நடத்தினோம்.

வேலைவாய்ப்பு துறை இணைய தளத்தில் எளிதாக பதிவு செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா? என்பது குறித்து அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

அதே போன்று சிறு குறு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், அடிப்படை சம்பளம் கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அரசு இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. எனவே இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வேலைக்கு தொழிலாளர்கள் செல்வதைத் தடுக்க சொந்த மாவட்டத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மின்தடை நிலவுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,

படிப்படியாக துறை சார்ந்த அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN