Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் பல மணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
கோடைக்காலத்தில் அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரம், முன்னறிவிப்பின்றி அடிக்கடி துண்டிக்கப்படுவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது, உடல்நலனும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்புகள் மற்றும் மின் கட்டண உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், தற்போது நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மேலும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், மக்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
எனவே, தமிழக மக்களின் தற்போதைய முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள மின்வெட்டு பிரச்னையை உடனடியாக போக்க தமிழக அரசு மற்றும் மின்சாரத்துறை அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P