Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட அரசாணை கடந்த 11.05.2026 அன்று வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (23.05.2026) சென்னை அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் க. விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில், இதுவரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்திருந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மீதமுள்ள கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களை விரைவாக மூட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில், அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் அவர்களை மீளப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
அதேபோல், அனைத்து டாஸ்மாக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் தொகைக்கு மதுபானம் விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ