சென்னை தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் சிறைபிடிப்பு
தண்டையார்பேட்டை, 23 மே (ஹி.ச.) சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் மின்தடையை கண்டித்து, மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார் நகர் மெயின் தெருவில் கடந்த 5 ஆண்டுக
மின் தடை


தண்டையார்பேட்டை, 23 மே (ஹி.ச.)

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் மின்தடையை கண்டித்து, மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார் நகர் மெயின் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக மின் மாற்றி பில்லர் பாக்ஸ் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தொடர் மின்வெட்டால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, நேற்று இரவு மின்சாரம் இன்றி மக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள பொதுமக்கள் முயன்றபோதும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, பழுதை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர்களை ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிறைபிடித்து வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மின்வாரிய ஊழியர்களை மீட்டுச் சென்றனர்.

தொடர்ந்து மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P