தவெக நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் போலீசில் புகார்
வேலூர், 23 மே (ஹி.ச.) வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் சில செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக கட்சியைச் சேர
TVK Cadres


வேலூர், 23 மே (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் சில செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கணியம்பாடி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் வந்ததாக கூறப்படும் தவெக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர், செங்கல் சூளை உரிமையாளர்களை சந்தித்து, “எங்கள் தவெக ஆட்சி நடக்கிறது.

இந்த பகுதியில் தொழில் நடத்த வேண்டுமெனில் எல்லா சூளைக்காரர்களும் மாமூல் தர வேண்டும். இல்லையெனில் செங்கல் தொழிலை நடத்த முடியாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், கணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், மாமூல் கேட்டு தொடர்ந்து மிரட்டிவரும் தவெக கட்சி பிரமுகர்களை அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மிரட்டல் நடந்தபோது செங்கல் சூளையில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்கள் கடும் அச்சத்தில் அருகிலிருந்த செங்கல் குவியல்களுக்குள் மறைந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் விடாமல் தவெக நிர்வாகிகள் மிரட்டியதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் கணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN