Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன் என சென்னையில் இன்று
(23-05-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன உறுப்பினருமான திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது,
விடுதலை சிறுத்தைகளும் திராவிட முன்னேற்ற கழகமும் எந்த அளவுக்கு கொள்கை புரிதலோடு கைகோர்த்து களமாடி இருக்கிறோம் என்பதை நாடு அறியும்.
இந்த முடிவை நாங்கள் மேற்கொள்வதற்கு தனிப்பட்ட முறையில் தன்னலம் அல்லது பதவி ஆசை என்கிற காரணிகள் முதன்மையானவை அல்ல. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற அரசியல் நெருக்கடிதான் காரணம் என்பதை மேனால் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் நன்கு அறிவார்.
நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க இருக்கிறோம் என்பது குறித்து அவரிடம் வெளிப்படையாக நாங்கள் மனம் திறந்து பேசி இருக்கிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன முடிவை எடுக்கிறார்களோ அதை ஒட்டி விடுதலை சிறுத்தைகளும் முடிவை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று நான் ஊடகங்களின் வாயிலாக சொன்னது மட்டுமில்லாமல் அவரிடம் அவரை தனிமையில் சந்தித்த போதும் சொல்லியிருக்கிறேன்.
தனிநபர் தேவைகளுக்காக எந்த முடிவையும் நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன முடிவை எடுக்கின்றனவோ அந்த முடிவை ஒட்டி எங்கள் முடிவும் இருக்கும் என்று கூறினோம். அப்போது ஸ்டாலினோ, அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினோ, அதை எதிராக பார்க்கவில்லை.
இந்த சூழலுக்கு ஏற்ப நீங்கள் எடுக்கிற முடிவை என்ன முடிவாக இருந்தாலும் அந்த முடிவை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் கூறினார்கள்.
ஆகவே அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகுதான் இந்த முடிவை நோக்கி நாங்கள் நகர்ந்திருக்கிறோம்.
வெளிப்படையாக தவெக தரப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் பின்னர் இயக்கத்தோழர்கள் மீண்டும் இது குறித்து கலந்து பேச வேண்டும் என்று விரும்பினார்கள்.
அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து மீண்டும் மேலோங்கியது. ஆகவே கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு நானும் அந்த நிலைப்பாட்டுக்கு இணங்கும் சூழல் உருவானது. அப்போது நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்கிற கருத்து மேலோங்கியது.
அதற்கு நான் இணங்கவில்லை. கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பது இறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் 30 ஆண்டுகளுக்கு மேலாக என்னோடு பயணித்து வருகிற இயக்க பணிகளில் தீவிரமாக முனைப்பாக பணியாற்றி இருக்கிற பணியாற்றிக் கொண்டிருக்கிற கட்சியின் மூத்த பொறுப்பாளராக துணை பொதுச் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிற வன்னியரசுவை பரிந்துரைப்பதுதான் சரி என்று நான் முடிவு செய்தேன்.
விடுதலை சிறுத்தைகள் எடுத்த முடிவுகள் பதவி ஆசை இல்லை. தேர்தலுக்கு முன், என்னை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல முனைகளில் இருந்தும் முயற்சித்தனர். ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்தவிடமாட்டேன் என உறுதியாக நின்று அதனை நடத்தியும் காட்டினேன்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. ஐயூஎம்எல் நிலைப்பாட்டில் நான் தலையிட முடியாது.
ஆனால் சமூக வலைதளங்களில் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு கணைளை ஏவுவது ஏன் என்று தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் வந்த கையோடு காங்கிரஸ் எடுத்த முடிவு, அதனை ஒட்டி அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் காட்சிகள், நேர்மையாக சிந்திக்கக்கூடிய அனைவருக்கும் என்ன என்பது தெரியும்.
எங்கள் கட்சிக்கு ஒரு வரைமுறை இருக்கிறது. அந்த வரையறைகளின்படி இடதுசாரிகள் எடுத்த முடிவை முன்வைத்து இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக உயர்நிலை குழுவில் விவாதித்து அந்த முடிவை கூட்டணியின் தலைவர் ஸ்டாலினிடம் விளக்கிச் சொல்லி அதன் பிறகுதான் அறிவிப்பது என்று நாங்கள் முடிவெடுத்தோம். இன்றைக்கும் எங்களுக்கு எதிரான பல அவதூறுகளை பரப்புகிறார்கள்.
இந்த விமர்சனங்களுக்கு என்னால் இந்த சூழலில் பதில் சொல்ல இயலாது. எங்கள் நேர்மையையோ, எங்கள் அரசியல் தூய்மையையோ கலங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
எங்கள் நிலைப்பாட்டை மிக மிக நிதானமாக தான் நாங்கள் எடுத்திருக்கிறோம்.
எங்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடைய வாழ்த்துக்களோடுதான் அல்லது ஆதரவோடுதான் அல்லது இசைவோடுதான் இந்த ஆதரவை நாங்கள் வழங்குகிறோம் என்று அறிவித்து விட்டு தான் வழங்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b