Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 24 மே (ஹி.ச)
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன 10 வயது சிறுமி, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில், தொடர்புடைய மோகன்ராஜ், கார்த்தி ஆகிய இரண்டு குற்றவாளிகளும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்த அவர் இந்த வழக்கில் எவ்வித தாமதமும் இன்றி விசாரணையை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் ஐஜி கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், சிறுமி கொலை வழக்கில் காவல்துறை இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விரிவான விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், கொடூரமான இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட மனநல ஆலோசனை, மறுவாழ்வு உதவிகள் மற்றும் இழப்பீடு குறித்த விவரங்களையும் அறிக்கையில் இணைக்க வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கை வழக்கில் விரைவான முன்னேற்றத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b