Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை மேலும் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் 19 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின் தாக்கத்தால் வரும் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட குறைந்து காணப்படும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது பொதுமக்களுக்கு சற்று இதமான சூழலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாளை பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
மீனவர்கள் கடலுக்கு செல்லும் முன் வானிலை நிலவரத்தை அறிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b