Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி, அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி தம்பதியரின் மகளும், செவிலியர் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தவருமான சீதாலட்சுமி, மூக்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து வழங்கப்பட்டதால் மாணவி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், மருத்துவர்களின் அலட்சிய செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முழுமையாக நம்பி சிகிச்சை பெறும் சூழலில், அரசு மருத்துவமனைகள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், நடைமுறையில் நோயாளிகளிடம் அலட்சியமான அணுகுமுறையும், மருத்துவ சேவையில் குறைபாடுகளும் தொடர்வதே உயிரிழப்புகளுக்குக் காரணமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகளின் தூய்மை, பாதுகாப்பு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் இருப்பு உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மாணவி சீதாலட்சுமி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P