உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம் - இயற்கை அழகை ரசிக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்
உதகை, 24 மே (ஹி.ச.) கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கவும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர
உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம் -  இயற்கை அழகை ரசிக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்


உதகை, 24 மே (ஹி.ச.)

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கவும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய இடங்களுடன், இந்த மலை ரயில் பயணமும் அவசியம் அனுபவிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.

அந்த வகையில் கோடை விடுமுறை காலத்தை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் பாதையில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கோடை சீசனை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது.

பசுமை போர்த்திய மலைச்சரிவுகள், அடர்ந்த சோலைக்காடுகள், தேயிலைத் தோட்டங்கள், கொண்டை ஊசி வளைவுகள் என நீலகிரியின் இயற்கை எழிலை மெதுவாக கடந்து செல்லும் இந்த பயணம், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. ஆன்லைன் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.

குறிப்பாக வார இறுதி நாட்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிகின்றன. குடும்பத்துடன் வரும் பயணிகள், புகைப்பட ஆர்வலர்கள், இயற்கை ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த ரயில் பயணம் கவர்ந்துள்ளது.

ரயில் நிர்வாகம் சார்பில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை சீசன் முடியும் வரை இந்த சிறப்பு ரயில் சேவை தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b