Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 09 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள புதைவட மின்சார கேபிள் பெட்டியில் இருந்து 14 பியூஸ் கேரியர்களை திருடிச் சென்ற இருவரை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் வினித் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து மின்வாரிய அலுவலகம் அருகே இருந்த புதைவட கேபிள் பெட்டியின் மூடியைத் திறந்து, அதில் பொருத்தப்பட்டிருந்த 14 பியூஸ் கேரியர்களை கழற்றிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தால் ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய ஆவடி போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், தினேஷ்குமார் மற்றும் வினித் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில், கைதான இருவரும் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் பியூஸ் கேரியர்களை தொடர்ந்து திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட பியூஸ் கேரியர்களை செங்குன்றம் அருகே உள்ள உலோக கடைகளில் விற்று பணம் பார்த்து வந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மின்சார சேவையை பாதிக்கும் இத்தகைய திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b