Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 09 ஜூன் (ஹி.ச.)
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பாட்டில் இருந்த மின்மாற்றிகளை உடைத்து சுமார் 800 கிலோ எடையுள்ள செப்பு கம்பிகள் திருடப்பட்ட சம்பவம் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான செப்பு கம்பிகளை திருடியதாக 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளை குறிவைத்து, அவற்றை உடைத்து உள்ளே இருந்த செப்பு கம்பி சுருள்களை திருடி வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேன், இருசக்கர வாகனம் மற்றும் சுமார் 300 கிலோ எடையுள்ள செப்பு கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீதமுள்ள கம்பிகளை குற்றவாளிகள் ஏற்கனவே உருக்கு ஆலைகள் மற்றும் பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மின்மாற்றிகள் சேதப்படுத்தப்பட்டதால் பல கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் பொது சொத்து சேதப்படுத்துதல், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், இக்கும்பலுக்கு வேறு மாவட்டங்களிலும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்மாற்றிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b