Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 09 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தில், அனுமதியில்லாமல் இயங்கி வரும் கல் குவாரிகளை மூட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் பல மாதங்களாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரியில் பணியாற்றும் ஊழியர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் குவாரியில் வெட்டிய கற்களை
ஏற்றி செல்ல லாரி உரிமையாளர்களை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், ஏதேனும் பிரச்சனை என்றால் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என லாரி உரிமையாளர்களிடம் பேசியதால், லாரி உரிமையாளர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் லாரிகளை இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில், அனுமதியில்லாமல் கற்களை ஏற்றி சென்ற லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக லாரி உரிமையாளர் மற்றும் லாரி ஓட்டுனர் சங்கத்தினர், குவாரி நிர்வாகத்திடம் அனுமதி சீட்டு வழங்காமல் எங்களை அனுப்பி சிக்கலில் மாட்டிவிட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த குவாரியில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக டன் கணக்கில் வெடி வைத்து தகர்த்து வெட்டி எடுத்து அனுமதி சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
குவாரியில் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்த நிர்வாகத்தினர் லாரியில் இருந்த கற்களை கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. விவசாய நிலங்களில் எடுக்கும் மணல் அனுமதி சீட்டினை இதில் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் குவாரிக்கு சென்று ஆய்வு செய்து ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam