Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 09 ஜூன் (ஜி.ச.)
திருமலையில் எழுமலையான் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், நேர்த்திக்கடன் செலுத்தவும் சுவாமி தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு திரண்டு வருகின்றனர்.
இன்று காலை 7 மணி நிலவரப்படி, வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பியுள்ளன.
பக்தர்கள் சிலாத்தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி.) வெளியிட்ட தகவலின்படி,
டோக்கன் இல்லாமல் சர்வ தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 15 முதல் 18 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அதேசமயம், நேர ஒதுக்கீட்டு (டைம் ஸ்லாட்) டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 4 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் கிடைத்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 95 ஆயிரத்து 152 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் 40 ஆயிரத்து 601 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மூலம் உண்டியல் வருவாயாக ரூ.4 கோடியே 44 லட்சம் கிடைத்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் 4 லட்சத்து 21 ஆயிரம் லட்டுகள் விற்பனையானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தரிசன ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA