சென்னை சென்ட்ரல் - திருத்தணி புறநகர் மின்சார ரயில் சேவையில் ஜூன் 12 வரை மாற்றம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சென்னை, 09 ஜூன் (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் - திருத்தணி மார்க்கத்தில் பிற்பகல் நேரங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் வரும் ஜூன் 12 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் ரயில் பணிமனையி
Changes to Chennai Central – Tiruttani suburban electric train services


சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் - திருத்தணி மார்க்கத்தில் பிற்பகல் நேரங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் வரும் ஜூன் 12 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரக்கோணம் ரயில் பணிமனையில் அவசர தண்டவாள தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, திருத்தணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்படும் மின்சார ரயில், திருவாலங்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். திருவாலங்காடு முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான சேவை ஜூன் 12 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் நலன் கருதி, திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் ஒன்று இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அலுவலகம் செல்வோர் மற்றும் காலை நேர பயணிகளின் சிரமத்தை குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் வழித்தடத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக, ஒட்டுமொத்தமாக ஐந்து புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர, 40க்கும் மேற்பட்ட இ.எம்.யு மற்றும் மெமு ரயில்கள் பல்வேறு நிலையங்களுடன் பகுதியாக ரத்து செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பயணிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே பயணத்தை திட்டமிடும் முன் ரயில்வே அதிகாரிகளின் அறிவிப்புகளை சரிபார்த்துக்கொள்ளுமாறும், சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தண்டவாள பணிகள் ஜூன் 12 ஆம் தேதியுடன் நிறைவடைந்த பின்னர் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம்போல இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b