Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச)
கடந்த 2009 – 2010-ஆம் ஆண்டுகளில் விதிகளை மீறி சிக்கிம் மாநில லாட்டரியை விற்பனை செய்ததன் மூலம் சுமார் 910 கோடி ரூபாய் அளவுக்கு சிக்கிம் மாநில அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
மேலும் இதில் கிடைத்த வருவாய் மூலமாக 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அசையா சொத்துகளை அவர் வாங்கியதாகவும் புகார் எழுந்தது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், மார்ட்டினுக்குச் சொந்தமான 258 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கினர்.
தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு மார்ட்டினுக்குச் சொந்தமான 19.59 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது.
கேரளா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அந்த முடக்கத்தை, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, மார்ட்டின் மற்றும் அவரின் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், 'சொத்துக்களை முடக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து, சொத்துக்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மனுக்களுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.
இதற்கிடையே, மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், மகள் டெய்சி, லீமா ரோஸ் மார்ட்டினின் தம்பி ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் பெயர்கள் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இணைந்து பேசப்பட்டு வந்தது. இதற்கிடையே, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக லீமா ரோஸ் மார்ட்டினின் சகோதரர் ஜான் பிரிட்டோ இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, தன்னுடைய பெயரை போன்று கடத்தலில் ஈடுபட்டவருக்கும் ஒரே மாதிரியாக பெயர் இருப்பது மட்டுமே இருவருக்குமான ஒற்றுமை, அவர் யாரென்றே தனக்கு தெரியாது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN