Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 09 ஜூன் (ஹி.ச)
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை குறிவைத்து திமுக ஐடி விங் பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக தமிழக வெற்றிக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுகவின் அரசியல் பொய்களும், உண்மைக்கு மாறான தகவல்களும் அடிப்படையாக கொண்டது என்றும், அதன் நீட்சியாக திமுக ஐடி விங் தரம்தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும் அவதூறு செய்திகளையும் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ள த.வெ.க., அமலாக்கத்துறை விசாரணையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.
அத்தகைய தொடர்பு இருப்பதாக கூறினால், அதை சட்டரீதியாக நிரூபிக்க திமுக ஐடி விங் முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் அவதூறு பரப்பியதற்காக சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததாக குற்றம்சாட்டியுள்ள த.வெ.க., தற்போது அந்தப் பிரச்சினையை ஒழித்து இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
அமைச்சர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக ஐடி விங் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொய்யான தகவல்கள் மற்றும் அவதூறு பிரசாரங்கள் மூலம் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படும் திமுக ஐடி விங்-இன் செயல்பாடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் என்றும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ