தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனையில் 64 பேர் மீது வழக்கு பதிவு - ரூ.37.75 லட்சம் பறிமுதல்
சென்னை, 09 ஜூன் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சப் பணம் கைமாறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 4ஆம் தேதி ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய சார்பதிவா
Dvac


சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சப் பணம் கைமாறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 4ஆம் தேதி ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆவணி, வைகாசி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி நிலம் மற்றும் சொத்து பதிவுகளுக்காக பொதுமக்கள் அதிக அளவில் சார்பதிவாளர் அலுவலகங்களில் குவிந்திருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையின்போது அலுவலகங்கள் முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் யாரும் வெளியேறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கணக்கில் வராத ரொக்கப் பணம், ஆவணங்கள் மற்றும் சொத்து மதிப்பீடு தொடர்பான முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.37 லட்சத்து 75 ஆயிரத்து 650 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதில் சேலம் கிழக்கு மற்றும் திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் தலா சுமார் ரூ.3 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய விளக்கம் மற்றும் ஆவணங்களை வழங்கியவர்களுக்கு அந்தத் தொகை திருப்பி அளிக்கப்பட்டதாகவும், உரிய கணக்குகளை அளிக்க முடியாத பணம் லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக கருதி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் கண்டறியப்பட்ட முறைகேடுகளின் அடிப்படையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 சார்பதிவாளர்கள், 8 உதவியாளர்கள், தரகர்கள் மற்றும் தனிநபர்கள் அடங்குவர்.

பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்களிடம் உதவியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சத் தொகை வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, கோவை (தொண்டாமுத்தூர் மற்றும் காந்திபுரம்), திருப்பூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள், உதவியாளர்கள், தரகர்கள் மற்றும் தனிநபர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

46 இடங்களில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது 11 அலுவலகங்கள் தொடர்பாக மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மற்ற அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ