Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச)
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
இதற்காக அமைக்கப்பட்ட 5 தனிப்படைகள் நடத்திய விசாரணையில், கடந்த மே 18ஆம் தேதி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், கணினி பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த ஊழியரான ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கோபிநாத் (31) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் பெங்களூருவில் உள்ள கடை உரிமையாளர் முரளி மனோகரிடம் இருந்து வழக்கில் தொடர்புடைய அனைத்து ஹார்ட் டிஸ்குகளையும் மீட்டனர்.
மேலும், கோபிநாத் முன்பு பணியாற்றிய நிறுவனங்களிலிருந்தும் கணினி உதிரிபாகங்களை திருடியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மொத்தம் 34 ஹார்ட் டிஸ்குகள் மற்றும் 20 ரேம் (RAM) பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோபிநாத் மற்றும் திருடப்பட்ட பொருட்களை வாங்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் முரளி மனோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில் இருந்த அழிக்கப்பட்ட தரவுகளை காவல்துறையின் தொழில்நுட்ப நிபுணர்கள் மீட்டெடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
அதில், மின்வாரியத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் அல்லது குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய எந்தவொரு முக்கிய ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, முந்தைய காலங்களிலும் ஹார்ட் டிஸ்க் திருட்டுகள் நடந்திருக்கலாம் என்றும், அவை குறித்து ஏன் புகார்கள் அளிக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோபிநாத் தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு பரவலான கவனத்தை ஈர்த்த நிலையில், மின்வாரியம் அல்லது அதன் கிளை நிறுவனங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே ஹார்ட் டிஸ்குகள் திட்டமிட்டு திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்திருந்தன.
இதனிடையே, வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மின்வாரிய தலைமை அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கின் விசாரணையை சென்னை காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றி தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, 2021 முதல் 2023 வரை டான்ஜெட்கோ வெளியிட்ட விநியோக மின்மாற்றிகள் கொள்முதல் டெண்டர்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.397 கோடி முறைகேடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில், ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ