Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச)
வளைகுடா நாடுகளில் தற்போது நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக ஈரானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழர்களுக்கான பிரத்யேக உதவி எண்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் 1800 309 3793 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பிரத்யேகமாக +91 8069009901 அல்லது 08069009901 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பதற்றமான சூழலில் ஈரானில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்கள், இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அவசர உதவி எண்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் நிலையைத் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் இந்த உதவி எண்களை அணுகலாம் என்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b