குட்கா முறைகேடு வழக்கு - முன்னாள் வணிக வரித்துறை அதிகாரியின் மனு தள்ளுபடி
தமிழ்நாடு, 09 ஜூன் (ஹி.ச.) சென்னையில் நடைபெற்று வரும் குட்கா முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் வணிக வரித்துறை இணை ஆணையர் வி.எஸ். குறிஞ்சிச்செல்வன் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. த
உயர்நீதிமன்றம்


தமிழ்நாடு, 09 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் நடைபெற்று வரும் குட்கா முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் வணிக வரித்துறை இணை ஆணையர் வி.எஸ். குறிஞ்சிச்செல்வன் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 26 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி குறிஞ்சிச்செல்வன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, வழக்கில் பதிவாகியுள்ள சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய போதுமான முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் எந்த விதமான சட்டப்பிழையும் இல்லை எனத் தெரிவித்து, குறிஞ்சிச்செல்வனின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam