தூயசக்தி ஆட்சியா? தி.மு.க. நீட்சியா? – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஹெச். ராஜா
சென்னை, 09 ஜூன் (ஹி.ச.) தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியை கடுமையாக விமர்சித்து, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தூயசக்தி என்ற சொல்லுக்கு நியாயம், நீதி, உண்மை,
Hraja


Gg


சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியை கடுமையாக விமர்சித்து, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

தூயசக்தி என்ற சொல்லுக்கு நியாயம், நீதி, உண்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை ஒன்றிணைந்த வடிவமே அர்த்தம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த அடிப்படைகளில் தவெக அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தால் தோல்வியே மிஞ்சும் என விமர்சித்துள்ளார்.

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய ஹெச். ராஜா, அரசை விமர்சித்ததற்காகவே அவரை கைது செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி, இது நியாயமற்ற நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அரசு அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டிய அவர், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுவது அநீதி என்றும், இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மின்சாரத் துறையில் காணாமல் போனதாக கூறப்படும் ஹார்டு டிஸ்க் விவகாரத்திலும் அரசின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பியுள்ள ஹெச். ராஜா, முதலில் ஒரு ஹார்டு டிஸ்க், பின்னர் நான்கு, தற்போது 18 ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என தகவல்கள் வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டி, உண்மையை வெளிப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டங்கள் நடைமுறையில் மாற்றப்பட்டுள்ளதாக கூறி, இது நேர்மைக்கு எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இருப்பதாக கூறிய அரசு, அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்த விதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் வெளிப்படையாக செயல்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இறுதியாக, தன்னை தூயசக்தி என அழைத்துக் கொள்ளும் வாய்ச்சொல் வீரர்களும் தீயசக்தி திமுகவின் நீட்சியே என்று குறிப்பிட்டுள்ள ஹெச். ராஜா, மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி தனது விமர்சனத்தை நிறைவு செய்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ