Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 09 ஜூன் (ஹி.ச.)
கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி ஆகியோர் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையைக் கடப்பதற்காகப் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது.
இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இடதுபுறமாக காரைத் திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கியது. இதில் காரில் பயணித்த அரவிந்த் (30), அவரது மனைவி ஜனனி (27) மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஜனனி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரில் இருந்த 3 வயது பெண் குழந்தை துவிதா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகிய இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN