Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 09 ஜூன் (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் சார்பு ஆய்வாளர் (SI) தம்பதி உள்ளிட்ட நான்கு பேருக்கு 900 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை நெல்லை நீதிமன்றம் இன்று வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவருடைய மகன் கவின் செல்வகணேஷ் (வயது 26). இவர் சென்னையில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனம் (IT Company) ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவின் செல்வகணேஷ் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை சம்பவத்தில், கவின் செல்வகணேஷ் காதலித்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்குத் தொடர்பு இருப்பதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக, இளம்பெண்ணின் பெற்றோரும், காவல் துறையில் சார்பு ஆய்வாளர்களாக (SI) பணியாற்றி வருபவர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் அவர்களது மகன் சுர்ஜித் ஆகியோருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாக கவினின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில், முக்கியக் குற்றவாளியான சுர்ஜித், அவரது பெற்றோரன சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) உள்ளிட்ட 6 கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான சுர்ஜித், அவரது தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய நான்கு பேரும் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா, இவ்வழக்கில் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 900 பக்கங்கள் அடங்கிய விரிவான குற்றப்பத்திரிகையின் நகல்களை, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தனித்தனியாக வழங்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
ஏற்கனவே கிருஷ்ணகுமாரி ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை வருகின்ற 12ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது
Hindusthan Samachar / ANANDHAN