Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 09 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜேஷ் குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளரும் கிள்ளியூர் தொகுதி வேட்பாளருமான சபின் விஜய் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பரபரப்பான புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், கிள்ளியூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்றும், வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியதால் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவோ அல்லது மறு தேர்தலை அறிவிக்கவோ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை உறுப்பினராக உள்ள காங்கிரஸ் அமைச்சரின் வெற்றியே செல்லாது என டிவிகே சார்பில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், டிவிகே மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்ட அரசியல் களத்திலும் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam