ரயில்களில் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 இளைஞர்கள் கைது
மதுரை, 09 ஜூன் (ஹி.ச.) மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மெதுவாக நகரும் நேரத்தில், படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்பவர்களிடம் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. இதையடுத்து, இந்த குற்ற செயலில் ஈடுபடும் கும்பலை கை
Madurai


மதுரை, 09 ஜூன் (ஹி.ச.)

மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மெதுவாக நகரும் நேரத்தில், படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்பவர்களிடம் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

இதையடுத்து, இந்த குற்ற செயலில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய மதுரை ரயில்வே காவல் ஆய்வாளர் சாவித்ரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, கடந்த 6 ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலின் பொதுப் பெட்டியில் படியில் அமர்ந்து பயணம் செய்த ஒருவரின் மீது கல் எறிந்து, அவரது செல்போனை ஒரு கும்பல் பறித்து சென்றது. இது தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை ரயில்வே காவல் துறையினர் கண்டறிந்தனர்.

விசாரணையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விக்னேஷ் (30) மற்றும் விஷால் (18) ஆகியோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விக்னேஷ் மீது ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், இருவரும் தண்டவாள ஓரங்களில் அமர்ந்து மது அருந்தி விட்டு, ரயில் பயணிகளை குறி வைத்து செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, மதுரை இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து இருவரையும் கைது செய்து, பறிக்கப்பட்ட செல்போனை மீட்டனர்.

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN