மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு - ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பதில் சிக்கல்?
சேலம், 09 ஜூன் (ஹி.ச.) தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து காணப்படுவதுடன், காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்
மயடடூர்


சேலம், 09 ஜூன் (ஹி.ச.)

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து காணப்படுவதுடன், காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 772 கனஅடி நீர் மட்டுமே வரத்தாக கிடைத்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் 79.75 அடியாகவும், நீர் இருப்பு 41.70 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அதே நேரத்தில் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நடைமுறை உள்ளது. கடந்த ஆண்டு போதுமான நீர் இருப்பு மற்றும் வரத்து காரணமாக குறித்த நாளிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அணையில் போதுமான அளவு நீர் இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர வாய்ப்பு இருப்பதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேட்டூர் அணை வரலாற்றில், ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக 20 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், போதுமான நீர் இருப்பு இருந்த 11 ஆண்டுகளில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன்

12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P