தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டம் - தென் கொரியாவில் ஹூண்டாய் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை
சென்னை, 09 ஜூன் (ஹி.ச.) தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அந்நாட்டின் உல்சான் நகரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டு, தூத்துக்குடியில் அமையவுள்ள உலகத் தரம் வாய்ந்த க
Keer


சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)

தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அந்நாட்டின் உல்சான் நகரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டு, தூத்துக்குடியில் அமையவுள்ள உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டுமானத் திட்டம் குறித்து உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் மொத்த டன் (GT) கொள்ளளவு கொண்ட உலகத் தரம் வாய்ந்த பிரம்மாண்ட கப்பல் கட்டுமானத் தளத்தை உருவாக்கி, மேம்படுத்தி, நிதியளித்து, கட்டி இயக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

தற்போது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்டுள்ள தென் கொரியா பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, கப்பல் கட்டுமானத் தளத்திற்கான நில ஒதுக்கீடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வரிச் சலுகைகள், முதலீட்டு ஆதரவு மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருதரப்பினரும் விரிவாக விவாதித்தனர்.

அமைச்சர் கீர்த்தனாவின் இந்தப் பயணம், தமிழ்நாட்டை கப்பல் கட்டுமானத் துறையில் முக்கிய மையமாக உருவாக்குவதற்கான அரசின் உறுதியையும், திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளையும் வெளிப்படுத்துவதாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ