Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், ஒரு சிலர் வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
இவ்வாறு திட்டமிட்டு மின்தடையை உருவாக்குபவர்கள் மீது அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என சிலர் பொதுமக்களை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு உதாரணமாக பெரம்பூர் பகுதியில் ஏற்பட்ட மின்தடையை சுட்டிக்காட்டிய அவர், அங்கு 40 நிமிடங்களுக்குள் மின் விநியோகம் முழுமையாக சீர் செய்யப்பட்ட போதிலும், போராட்டம் நடத்துமாறு சிலர் தூண்டிவிட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், சோலார் மின் உற்பத்தியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு சற்று பின்தங்கியுள்ளதை ஒப்புக்கொண்டார்.
இதனை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b