Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்புப் படைகள் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மழைக்கால சேதங்களைக் குறைக்கவும், அவசரகால மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், பேரிடர் மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.1000 கோடி நிதி தேவைப்படும் என மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்ததாகவும், அந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிதியின் மூலம் மீட்பு உபகரணங்கள் கொள்முதல், பயிற்சி பெற்ற பணியாளர்களைத் தயார்படுத்துதல் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுதல் போன்ற அபாயங்கள் அதிகம் என்பதால், அங்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வானிலை எச்சரிக்கைகளைக் கவனமாகப் பின்பற்றி, தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b