Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நீண்டநேர மின்வெட்டுக்கு தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அம்பத்தூர், பெரம்பூர், அரும்பாக்கம், மாங்காடு, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்றிரவு பல மணி நேரம் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்த நிலையில், தற்போது கோடை வெப்பத்தால் அவதிப்படும் பொதுமக்கள் மின்சாரத்திற்காக போராடும் சூழல் உருவாகியிருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முந்தைய ஆட்சியில் அணில்களால் மின்வெட்டு ஏற்படுகிறது என கூறப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் மின் உபகரணங்கள் திருட்டே மின்வெட்டுக்குக் காரணம் என விளக்கம் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆட்சி மாறியிருந்தாலும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை என்று விமர்சித்தார்.
அதேபோல், மின்சாரத் துறையை கவனிப்பதற்குப் பதிலாக வேறு விவகாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மீதும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனம் மேற் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P