Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
வரும் வியாழக்கிழமை டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்படும் அவர், சுமார் 11 மணியளவில் டெல்லி சென்றடைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி பயணத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி பாரத் மண்டபம் வளாகத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்ட நிறைவில் மாலை 7 மணிக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாகவும், அதனுடன் நிதி ஆயோக் கூட்டம் நிறைவடையும் என்றும் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர் விஜய், மாலை 6 மணியளவில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
மேலும், வெள்ளிக்கிழமை காலை சில முக்கிய மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், திரௌபதி முர்மு மற்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P