பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம், 52 கிராம் வெள்ளி வேல் மாயம் - போலீசார் விசாரணை
திண்டுக்கல், 09 ஜூன் (ஹி.ச.) பழனியில் உள்ள இடும்பன்கோயிலில் இருப்பு கணக்கெடுப்பின்போது 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் மாயமாகியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடும்பன் கோவில்


திண்டுக்கல், 09 ஜூன் (ஹி.ச.)

பழனியில் உள்ள இடும்பன்கோயிலில் இருப்பு கணக்கெடுப்பின்போது 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் மாயமாகியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இடும்பன் கோயிலுக்கு, பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாகவும் காவடி எடுத்தும் வரும் பக்தர்கள் முதலில் வழிபாடு செய்வது வழக்கம். பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்க காணிக்கைகளையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலின் முன்னாள் செயல் அலுவலர் விமலா வேறு அரசு பணிக்கு சென்றதைத் தொடர்ந்து, புதிய செயல் அலுவலராக நரசிம்மன் பொறுப்பேற்றார். அவர் கோயிலின் இருப்புப் பொருட்களை சரிபார்த்தபோது, பதிவுகளில் இருந்த 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோயில் இருப்பில் இருக்க வேண்டிய நகைகளுக்கும் தற்போது உள்ள நகைகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகைகள் எப்போது மற்றும் எவ்வாறு மாயமானது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மாயமான சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam