Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 09 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் அருகே காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஊழியரை இருவர் விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிற்கு நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் பெட்ரோல் நிரப்ப இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வந்துள்ளார்.
அவர் எதிர்திசையில் வந்ததால், வரிசையில் வந்து நின்றால் மட்டுமே பெட்ரோல் நிரப்ப முடியும் என பெட்ரோல் பங்க் ஊழியர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனக்கே முதலில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதை ஊழியர் ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டி தனது நண்பரை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த நண்பருடன் சேர்ந்து, பெட்ரோல் பங்க் ஊழியருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், திடீரென ஊழியரை விரட்டி விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam