Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 09 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம்
சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ராமலட்சுமி (23), கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது தம்பி முத்துகிருஷ்ணன் (21), நாங்குநேரி பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
ராமலட்சுமி அடிக்கடி செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக முத்துகிருஷ்ணன் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
கோவில் திருவிழாவிற்காக விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த முத்துகிருஷ்ணன், ராமலட்சுமி செல்போன் பயன்படுத்தியதை மீண்டும் கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் சமரசம் செய்து வைத்த நிலையில், அவர்கள் மாடுகளுக்கு உணவு வைக்க வெளியே சென்றிருந்தபோது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன், வீட்டில் இருந்த அரிவாளால் ராமலட்சுமியை வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த ராமலட்சுமியை பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ராமலட்சுமியின் தாய் கண்ணகி அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். கொலைக்கான பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam