Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 09 ஜூன் (ஹி.ச)
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சிவபெருமாள் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
ஜூன் 18ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில் முதலமைச்சர் விஜய் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கள்ளு கடை திறப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, பனை விவசாயத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளு கடைகளைத் திறப்பது குறித்த முறையான அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல் வெளியிட வேண்டும் என்றார்.
தொடர்ந்து காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து பேசுகையில்,
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது, கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து ஆட்சி மாற்றத்தின் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றி கொடுக்க வேண்டும், என்று கூறினார்.
மேலும் பேசுகையில்,
வருகின்ற ஜூன் 12ஆம் தேதி திட்டமிட்டபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது.
அவ்வாறு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால், 12 மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்து கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக கேட்டு பெற வேண்டும்.
வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே, டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைக்கான நீர்வரத்து சொற்ப அளவிலேயே உள்ளது. அதனால் தற்போது இருக்கின்ற தண்ணீரை திறந்து விட்டால் கட்டாயம் காவிரி டெல்டா பாசனத்திற்கு போதுமானதாக இருக்காது.
இதனால் விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசிடம் பேசி தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவபெருமாள் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / ANANDHAN