Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 09 ஜூன் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குறிப்பாக சேர்வலாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 32 அடி அதிரடியாக உயர்ந்து, தற்போது 95 அடியை எட்டியுள்ளது. 156 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணை, 100 அடி என்ற முக்கிய நிலையை நெருங்குவதால் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டமும் கடந்த ஐந்து நாட்களில் 26 அடி உயர்ந்து, தற்போது 75 அடியாக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், இரு அணைகளின் நீர்மட்டமும் இன்னும் சில நாட்களில் கணிசமாக உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
வானிலை மையம் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவித்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து, விவசாயத்திற்கு தேவையான நீர் இருப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
அணைகளின் நீர்மட்டத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b