Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு திரித்துப் பரப்பப்படுவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்து ஒரு மாதமே ஆன நிலையில், மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களே தொடர்ந்து செய்திகளாக இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
பல குற்ற வழக்குகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்புடையதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதிய ஆட்சியை ஆறு மாதங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று கூறியிருந்த போதிலும், மாநிலத்தில் நிலைமை மோசமடைந்து வருவதால் விமர்சனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
“ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைக்குத்தான் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது” என்ற தலைவரின் கருத்தை, “மூன்று மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும்” என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆட்சியைக் கலைப்பது அல்லது கவிழ்ப்பது என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல என்றும், மக்களிடையே உருவாகியுள்ள அதிருப்தியையே தலைவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் அல்ல, மக்களே குறுகிய காலத்திலேயே களைத்துப் போய்விட்டார்கள் என்பதையே தலைவர் தனது உரையில் வெளிப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ