Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 09 ஜூன் (ஹி.ச.)
திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டல அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் சுப்பிரமணியம், சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் முருகனிடம் இருந்து லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதற்கான பில் தொகையை வழங்குவதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என இளநிலை பொறியாளர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிருப்தியடைந்த ஒப்பந்ததாரர் முருகன், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், உரிய ஆலோசனைகளை வழங்கி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன்படி, லஞ்சப் பணத்தை பெறும் நேரத்தில் அதிகாரிகள் மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் உடனடியாக அவரை பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சுப்பிரமணியத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் கேட்டதற்கான பின்னணி, இதற்கு முன்பு இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா, வேறு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN