திருநங்கை பீர் பாட்டிலால் குத்தி படுகொலை - இரண்டு இளைஞர்கள் சரண்
புதுக்கோட்டை, 09 ஜூன் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மஞ்சுவிரட்டு விழாவுக்காக பிரபலமான கண்மாய் அருகே, ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் திருநங்கை ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்ப
Thirumayam Police Station


புதுக்கோட்டை, 09 ஜூன் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மஞ்சுவிரட்டு விழாவுக்காக பிரபலமான கண்மாய் அருகே, ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் திருநங்கை ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமயம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், திருநங்கை பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர். மேலும், உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணனூர் ஓச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (21) மற்றும் குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற தோல்பாஷா (27) ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இருவரும் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன, சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆகாஷின் நண்பரான சதீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால், அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN