Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜூன் (ஹி.ச)
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி, பல இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலையால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடவே சிரமப்படும் சூழல் உள்ளதாகவும், அதே நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரவு நேரங்களில் பல மணி நேரம் நீடிக்கும் மின்வெட்டு மற்றும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினைகளால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதடைவதும் மக்களின் அதிருப்திக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும், அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது என அமைச்சர்கள் தெரிவித்த நிலையில், அதன் பின்னர் மாநிலம் முழுவதும் பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, அரசு கூறுவது ஒன்றாகவும் செயல்படுவது வேறாகவும் இருப்பதை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, பொதுமக்களின் துயரங்களை அலட்சியப்படுத்தாமல், மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, மக்களின் அடிப்படைத் தேவையான மின்சாரத்தை தடையின்றி வழங்க தமிழக அரசும் மின்வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ