Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 09 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய், பொதுக் கழிப்பிடம், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து முறையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, என் வீட்டு முன்பும் கழிவுநீர் தேங்கித்தான் உள்ளது.
நான் என்ன செய்ய முடியும்? என செயல் அலுவலர் அலட்சியமாக பதிலளித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், பிரச்சனைக்குரிய பகுதியை நேரில் ஆய்வு செய்ய தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வாடிப்பட்டி தொகுதி எம்எல்ஏ கருப்பையா சென்றார்.
அப்போது, அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இதை எல்லாம் செயல் அலுவலரிடம் சொன்னீர்களா? என எம்எல்ஏ கேட்டதாகவும், பின்னர் அதிகாரியை குறிப்பிட்டு “மருந்து குடித்து சாகச் சொல்லுங்கள்” என அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ வின் இந்த கருத்து அப்பகுதி மக்களிடையிலும் அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam